எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்

எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சங்க கட்டிடம் திறந்தால் தான் தனது திருமணம் என்று உறுதியாக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா என்று அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு, ‘ஆகஸ்ட் 29-ந்தேதி நல்ல தகவலை சொல்லுவேன்’ என்று விஷால் பதில் அளித்து இருந்தார்.

அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த விழாவில் தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

48 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக அமைந்திருக்கிறது. விஷால் – சாய் தன்ஷிகா ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *