'எல்லா படமும் பான் இந்தியா படம் ஆகாது' – நடிகர் நாகார்ஜுனா பேட்டி

சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனா, தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 20ந் தேதி குபேரா படம் வெளியானது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இப்படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை. ஆனாலும் இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கொரோனா காலத்துக்குப் பிறகு, எல்லோரும் மற்ற மொழி திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா படமாக ஆகிவிடாது.
ஒரு பான் இந்தியா படத்தை உருவாக்க, அதிக திட்டமிடலும், சக்திவாய்ந்த திரைக்கதையும் தேவை. சில கதைகள் மட்டுமே இந்தியா முழுவதும் வெளியாவதற்குத் தகுதியானது” என்று தெரிவித்துள்ளார்.