‘என் வீட்டை எட்டிப்பார்க்காதீங்க..'- கொந்தளித்த நடிகை ஆலியா பட்

மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வரும் ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஹா என்ற மகள் இருக்கிறார்.
மும்பையில் கபூர் குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான 6 அடுக்கு சொகுசு மாளிகையை தனது மகள் ராஹா பெயரில் ரன்பீர் – ஆலியா பட் தம்பதியினர் கட்டி வருகிறார்கள். விரைவில் அந்த சொகுசு வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்கிடையில் ஆலியா பட் கட்டி வரும் சொகுசு வீட்டின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
அதைதொடர்ந்து, ஆலியா பட் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘மும்பையில் இடம் குறைவாக இருக்கிறது என்பது உண்மைதான். ஒரு வீட்டின் ஜன்னல் அடுத்த வீட்டை பார்த்தபடி தான் இருக்கும். ஆனால் அதற்காக வீடியோ எடுத்து அதை வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. என் வீட்டை எட்டிப்பார்க்க வேண்டாம். அந்த வீடியோக்களை உடனே நீக்கிவிடுங்கள்’’, என்று குறிப்பிட்டுள்ளார்.