என் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியவர் அஜித் – நடிகை மஞ்சு வாரியர் | Ajith is the person who influenced my life

சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் மஞ்சு வாரியர். குறிப்பாக, நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘அசுரன்’ படத்தில் நடித்த பின்பு தமிழ்நாட்டில் பிரபலமானார். பின்னர் அஜித் உடன் ‘துணிவு’ படத்தில் இணைந்து நடித்தார். அதன் பின்னரே நடிகை மஞ்சு வாரியருக்கு பைக் டிராவல்கள் மீது ஈர்ப்பு அதிகமாகியது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், நடிகர் அஜித்தை போல் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக்கை மஞ்சு வாரியர் வாங்கினார். அதன்பின் அந்த பைக்கில் அஜித்துடன் இணைந்து இந்தியாவில் நிறைய இடங்களுக்கு மஞ்சு வாரியர் பைக் பயணம் சென்று உள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விடுதலை 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற மஞ்சு வாரியர் கூறியதாவது: அஜித்குமார் சார் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக பேசுவார். எனக்கு சிறிய வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்பது ஆசை. நான் எனது பக்கெட் லிஸ்டில்கூட இதுபற்றி எழுதி வைத்திருக்கிறேன். அஜித் சாருக்கு பைக் மீதிருக்கும் ஆர்வம் என்னையும் ஏதாவது செய்ய வேண்டுமென தூண்டியது. அவருக்கு பிடித்ததை செய்ய நேரம் ஒதுக்கி செய்கிறார். நமக்கு பிடித்ததை செய்ய அஜித் சாரைப் பார்த்து நானும் ஊக்கமடைந்திருக்கிறேன். நமக்கு பிடித்ததை செய்ய அவரும் ஒரு காரணமாக இருக்கிறார். நாம் சரியாக பயன்படுத்தினால் அதுவும் சரியாக வேலை செய்யும் என அஜித் கூறியதாகக் கூறினார்.