என் வாழ்க்கையை உயர்த்திய சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன்- நடிகை தேஜூ அஸ்வினி | I will forever remain true to the cinema that has elevated my life

சென்னை,
‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், தேஜூ அஸ்வினி. தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக இவர் நடித்த ‘பிளாக்மெயில்’ படம் விரைவில் வெளியாகிறது.
இதுகுறித்து தேஜூ அஸ்வினி கூறும்போது, ‘‘நான் சினிமாவுக்கு வந்தது எதிர்பாராத விதமாகத்தான். சினிமா விளம்பரம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்படம் நடித்தேன். அதனைத்தொடர்ந்து மாடலிங் சென்று, இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். பொருளாதார சூழலும், என் கனவும் சேர்ந்தது தான் சினிமா பயணம். இந்த சினிமாதான் என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறது. அந்த சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன்.
பல படங்கள் நடித்த பிரபலங்களுக்கு கூட கிடைக்காத ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த அதிர்ஷ்டம். ஏன் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு தான் என்பேன். ரசிகர்கள் மீதான என் காதல் முடிவில்லாதது. காதல் படங்கள் போல ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்க துடிக்கிறேன். காலமே எல்லாவற்றுக்கும் விடை சொல்லும்”, என்றார்.