என் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு வாழ்த்துகள்| Congratulations to Trisha Dosar for breaking my record.

என் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு வாழ்த்துகள்| Congratulations to Trisha Dosar for breaking my record.



சென்னை,

2023-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கடந்த மாதம் 1-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இது 71-வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகும். விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் 23-ம் தேதி நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

தமிழகத்தின் சார்பில், சிறந்த படத்துக்காக பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும், வாத்தி பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அவர்களைத் தவிர்த்து இந்தியில் நடிகர் ஷாருக் கான், மலையாளப் படத்துக்காக நடிகை ஊர்வசி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர்கள் போன்ற பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. இதில், நான்கு வயது சிறுமி ஒருவர் தேசிய விருது பெற்றிருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வர்ணனையாளர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது… ‘த்ரிஷா தோசர்’ என அழைத்ததும் ‘க்யூட்டாக’ சேலை அணிந்துகொண்டு மேடைக்கு வந்த நான்கு வயதே ஆன அவர் மேடைக்கு வந்து ஜனாதிபதியிடம் விருதைப் பெற்றுக்கொண்டார். அவர் மேடையில் ஏறியதும் அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அந்தச் சிறுமி விருது பெறும்போது ஷாருக் கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோரும் வியப்பாக பார்த்தனர்.

2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக ‘நாள் 2’ வெளியானது.

கதையின் முக்கிய கதாபாத்திரமான சைதன்யா, நீண்ட நாள்களுக்குப் பின்னர், தன்னுடைய தாய், உடன் பிறப்புகளைச் சந்தித்தபின் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவானது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியில் பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் தோல்வியடைந்தது. இதில், சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார்.

த்ரிஷா தோசரின் அப்பாவித்தனமான நடிப்பு மொத்தமாக போட்டியிட்ட 332 படங்களில் அவருக்கு முதல் தேசிய விருதைப் பெற்று கொடுத்து விட்டது. மேலும், இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையையும் த்ரிஷா தோசர் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் ‘நாள் 2’ என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை த்ரிஷா தோசர்-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்ததற்காக த்ரிஷா தோசர்-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம்! உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *