என்ன செய்வதென்றே தெரியல.. நடிகை சதா அழுது புலம்பும் வீடியோவால் பரபரப்பு

சென்னை,
டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள 10 லட்சம் தெரு நாய்களை பிடித்து கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை நடிகையும், வனவிலங்கு புகைப்பட ஆர்வலருமான சதா கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அழுதுகொண்டே வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘6 வயது குழந்தை இறந்ததற்கு காரணம் ரேபிஸ் நோய் இல்லை என்பது நிரூபணம் ஆன பிறகும் கூட, நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 10 லட்சம் நாய்களுக்கு அரசால் அடைக்கலம் கொடுக்க முடியாது. எனவே, அத்தனை நாய்களையும் கொல்லப் போகிறார்கள். தெரு நாய்களுக்கு உரிய காலத்தில் கருத்தடை ஊசி போட்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாதது, மாநில அரசின், நகராட்சியின் தோல்விதான். அப்படி இருக்கும்போது இந்த நாய்களை தண்டிப்பது எப்படி சரியானதாக இருக்கும்?.
நான் உள்பட பலரும் சொந்தப் பணத்தை செலவு செய்து நாய்களைக் காப்பற்ற முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. வீட்டில் அழகான நாய்க்குட்டி வேண்டும் என விலைக்கு எங்கிருந்தோ நாய்களை வாங்கி வளர்க்கும் உங்களால் தான் இன்றைக்கு பல நாய்கள் தெருக்களில் உள்ளன. பரிதாபமாக உயிரையும் விடப்போகின்றன. நீங்கள் எல்லாம் விலங்குகள் மீதோ, நாய்கள் மீதோ பிரியமானவர்கள் என்று சொல்லக்கூட தகுதியற்றவர்கள்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எப்படி தடுக்க முடியும். இதற்காக எங்கு போராட்டம் செய்வது என்றே தெரியவில்லை. நாய்களை முறையாக பராமரிக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சதாவை ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறி சமாதானப்படுத்தி வருகிறார்கள்.