''என்னை விஷம் வைத்து கொன்று விடுங்கள்'' – நடிகர் தர்ஷன்

சென்னை,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுதலையானார். அவரது ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் மாதாந்திர விசாரணையின்போது நேற்று சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவர் கூறுகையில், ”பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்று நடிகர் தர்ஷன் நீதிபதியிடம் முறையிட்டார்.
அதற்கு, அப்படியெல்லாம் செய்யமுடியாது என்று கூறிய நீதிபதி, தர்ஷனுக்கு படுக்கை, தலையணை வழங்க வேண்டும் என்றும், சிறை விதிமுறைகளின்படி அவர் நடைபயிற்சி மேற்கொள்ளவும், நடமாடவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.