"என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இதில்தான்.." – நடிகர் அருண்விஜய்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மதுரையில் ‘இட்லி கடை’ படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அருண் விஜய், “என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நான் சரியான வில்லன் கதாபாத்திரத்தினை தேடி கொண்டிருந்தேன். இந்த படத்தில்தான் அது நடந்தது. இந்த படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். இந்த மாதிரியான கதையுள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடை ஆசை. மேலும் இந்த படத்தின் மூலம் தனுஷ் சாருடன் பல மறக்கமுடியாத அனுபவங்கள் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.