என்னால் நடிக்க முடியாது என டிரோல் செய்தனர் – நடிகை அனுபமா பரமேஸ்வரன் | They trolled me saying I can’t act

சென்னை,
மலையாள மொழியில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். ரவிமோகனுடன் ‘சைரன்’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபலமானாலும் மலையாள திரை உலகில் அவருக்கு போதிய வரவேற்போ, வாய்ப்போ கிடைக்கவில்லை. மலையாள மொழியில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 3 படங்களே நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் அனுபமா பரமேஸ்வரன் பேசுகையில், “என்னால் நடிக்க முடியாது என ஏராளமானோர் ‘டிரோல்’ செய்தனர். அதை மீறி இயக்குனர் பிரவீன் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார். கடந்த ஆண்டு ‘டிராகன்’, ‘தில்லுஸ்கொயர்’ போன்ற படங்கள் வெற்றி அடைந்து என்னை உற்சாகப்படுத்தின. என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.