உழைப்புக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை- ஆர்.கே.செல்வமணி வேதனை

சென்னை,
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக, ‘300 கோமாளிகள்’ என்ற படத்தை பா.கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் அலெக்ஸ், செல்ல முத்தையா, அக்னி மோகன், விக்னேஷ் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசும்போது, “எல்லாரும் உழைக்கிறோம். ஆனால் வெற்றிக்கேற்ற சம்பளம் தான் கிடைக்கிறதே தவிர உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். ஒரு திரைப்படத்தில் யார் யார் வேலை பார்க்கிறார்கள்? அவர்கள் அனுபவம் என்ன? போன்ற அனைத்தையும் தரவுகளாகத் தொகுத்து அரசாங்கத்துக்குக் கொடுக்கலாம்.
இதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க கோரி முறையிடலாம். ஹாலிவுட்டில் மட்டும் தான் நடிகர்களின் சம்பளம், வெற்றி-தோல்வி அனைத்தையும் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் குறிப்பாகத் தமிழ் சினிமாவில் அந்த வெளிப்படைத்தன்மையே கிடையாது. இதுதான் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது” என்றார். ‘300 கோமாளிகள்’ திரைப்படம் 14-வது கொல்கத்தா சர்வதேச குறும்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.