உரிமைகளுக்காக படம் எடுப்பது போராட்டம் – இயக்குனர் ராஜ் சிவராஜ்

ராஜ் சிவராஜ் இயக்கத்தில் தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை, மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், கே.நஜாத், எல்.பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி, சபேசன், ஆர்.கே.கஜா உள்பட பலர் நடித்திருக்கும் ‘தீப்பந்தம்’ படம் இலங்கையில் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
கதைப்படி, இலங்கையில் நுாலகராக இருக்கும் ஒரு பெரியவர் ஒருவர் தமிழின் தொன்மையை, படைப்புகளை, நுால்களை பாதுகாக்க நினைக்கிறார். அவருக்கு என்ன பிரச்னை வருகிறது. என்ன நடந்தது என்பது கதை. காதல், காமெடி, எமோஷனல், திருப்பங்கள் கலந்து பக்கா கமர்ஷியல் படமாக தீப்பந்தம் உருவாகி உள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் ராஜ் சிவராஜ் கூறும்போது, ‘பொழுதுபோக்குக்கு எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் உரிமைகளை சொல்ல படங்கள் எடுப்பது மிகப்பெரிய போராட்டம். அந்த போராட்டங்களையெல்லாம் கடந்துதான் ‘தீப்பந்தம்’ படத்தை எடுத்தோம். இந்த படத்தை வ.கவுதமன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர் உரிமை போராட்டத்தை உரக்க சொல்லும் இந்த படம், வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. விரைவில் தமிழகத்திலும் திரைக்கு வரவிருக்கிறது. உரிமைகள் மறுக்கப்படும் இச்சூழலில், உரிமைகளை பெற எல்லா திசைகளிலும் அழுத்தம் கொடுப்பது அவசியமாகிறது. சினிமா என்ற வலுவான ஆயுதம் மூலம் அந்த விஷயத்தை பட்டை தீர்த்த பார்த்திருக்கிறோம்’ என்றார்.