உதவியாளருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்

சென்னை,
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில், பிரதீப்பின் உதவியாளர் சேகர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. `டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் தவறி இருக்கிறது. இதை நினைவில் வைத்து, சேகருக்காக கேக் வெட்டி நினைவுக் கேடயம் வழங்கி ஸ்பெஷலாகக் கொண்டாடியிருக்கிறார் பிரதீப்.
இதனால் நெகிழ்ந்து போன உதவியாளர் சேகர், “ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும், ஒருவரின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.அந்த ஒரு நாள் என் வாழ்வில் ஒரு இனிமையான கணமாக இருந்தது. இன்று அந்த நாளில் நடந்த என் இனிமையான கணங்களைப் பதிவிடுகிறேன். மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் சேகர் குறித்து பிரதீப் ரங்கநாதன் “சேகர் என்னுடைய பர்சனல் உதவியாளர். டிராகன்’ படத்தில் அவர் பணியாற்றினார். `டிராகன்’ பட 100-வது நாள் விழாவில் எல்லோருக்கும் ஷீல்ட் கொடுத்தார்கள். சேகருக்குமே நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், மேடையில் கூப்பிடும்போது அவருடைய பெயர் மிஸ் ஆகிவிட்டது. எனவே அவர் மேடையில் வந்து வாங்கவில்லை. அந்த ஷீல்ட் அனைவருக்குமே ஒரு மொமன்டாக இருந்தது. மேடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனைவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அன்று சேகரை மேடைக்கு கூப்பிட முடியலை என மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கக் கூடியவர். அவ்வளவு வேலை பார்த்த ஒருவருக்கு உரிய மரியாதை கொடுக்க வில்லை என்றால் மிகவும் தவறு என நினைத்தேன். அதனால், அவருக்கு ஸ்பெஷலாக ஷீல்ட் கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.