ஈரான் இயக்குநரின் 'தி சீட் ஆப் தி சாக்ரெட் பிக்' திரைப்படம் இந்தியாவில் வெளியீடு!

ஈரான் இயக்குநரின்  'தி சீட் ஆப் தி சாக்ரெட் பிக்' திரைப்படம் இந்தியாவில் வெளியீடு!


ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை மையமாக வைத்து உருவான அந்நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர் முஹம்மது ரசூலோப் இயக்கிய ‘தி சீட் ஆப் தி சாக்ரெட் பிக்’ திரைப்படம் வருகின்ற 24ம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது.

ஈரான் நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு மஹ்சா அமினி எனும் இளம்பெண் ஹிஜாப் அணியாததால், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக வெடித்த நாடு தழுவிய மக்கள் போராட்டம் 2023ம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர், அந்த போராட்டத்தை அரசு கடுமையான நடவடிக்கைகளின் மூலமாக அடக்கியது. இதில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தை மையமாக வைத்து அந்நாட்டு நீதிபதி ஒருவரது குடும்பத்தினுள் நடக்கும் கதையாக உருவான இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கி குவித்தது.

மேலும், ஆஸ்கார் விருதுகளின் சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் ஜெர்மனி நாட்டின் சார்பில் இடம்பிடித்தது.இந்த திரைப்படம் ஈரான் அரசின் கண்டனத்தை பெற்றதுடன் இயக்குநர் முஹம்மது ரசூலொபிற்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், அவருடன் அந்த படத்தின் குழுவினருக்கும் ஈரானை விட்டு வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும், அவர் அந்நாட்டிலிருந்து தப்பித்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இயக்குநர் ரசூலொப் தனது திரைப்படங்கள் வாயிலாகவும் தனிநபராகவும் ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக தனது கருத்துக்களைப் பதிவு செய்து சிறைத் தண்டனைகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *