இளையராஜாவுக்கு 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா

இளையராஜாவுக்கு 13ம் தேதி  தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா


சென்னை,

‘இசைஞானி’ இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கென தனி இடத்தை பெற்றுக் கொடுத்தார்.

வெஸ்டர்ன் கிளாசிக்கல் எனப்படும் மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா, மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி, பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். மேலும் கர்நாடக சங்கீதம், ஜாஸ் என பல்வேறு இசை பாணிகளிலும் இளையராஜா முத்திரை பதித்துள்ளார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

இளையராஜா மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றினார். .லண்டனில் இருந்து இளையராஜா திரும்பியபோதே, அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா கடந்த ஜூன் 2ம் தேதியன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இசை நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே சென்றது.

இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *