இளையராஜாவுக்கு பாராட்டு விழா – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இளையராஜாவுக்கு பாராட்டு விழா – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை,

‘இசைஞானி’ இளையாராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கென தனி இடத்தை பெற்றுக் கொடுத்தார்.

அது மட்டுமின்றி, வெஸ்டர்ன் கிளாசிக்கல் எனப்படும் மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா, மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி, பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார்.

மேலும் கர்நாடக சங்கீதம், ஜாஸ்(Jazz) என பல்வேறு இசை பாணிகளிலும் இளையராஜா முத்திரை பதித்துள்ளார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.�

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *