இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து


சென்னை,

1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து அசத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசை உலகின் பிதாமகன் இளையராஜா, லண்டனில் தனது கனவு படைப்பான ‘வேலியண்ட்’ சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அரங்கேற்றி உலக சாதனை படைத்தார். இதற்காக இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையிலும், இசை பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவையொட்டியும் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு வாழ்த்து கூறி ஏ.ஆர். ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனி பெருமைத் தேடி தந்தவர் இசைஞானி. இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்.குறிப்பாக திரை இசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில், அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி எனும் சாதனை, ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத் துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக் கூடிய சாதனையாக இருக்கிறது.

அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன். இசைஞானி இளையராஜாவின் பொன் விழா ஆண்டை தமிழ்நாடு அரசே ஒருங்கிணைத்து கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *