இயக்குனர் பாண்டிராஜ் உடன் மோதல் இருந்தது உண்மைதான்: விஜய் சேதுபதி

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர், ‘தென்மேற்கு பருவக்காற்று’ மூலம் நாயகனாக ஆனார். இடையிடையே வில்லனாகவும் மாஸ் காட்டும், தமிழ் மொழி கடந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் பயணித்து வரும் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:
விமர்சனங்கள் என்னை காயப்படுத்தியது கிடையாது. நாம் என்ன செய்தாலும் விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. இதை ஒரு நடிகனாக இல்லாமல், சாதாரண மனிதனாகத்தான் சொல்கிறேன். விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் தேவையான இடங்களில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
இயக்குனர் பாண்டிராஜ் உடன் சண்டையாமே? எனக்கேட்கிறீர்கள். எல்லாமே வேலைக்காகத்தான். எங்களுக்குள் சில முட்டல்-மோதல்கள் வந்தது உண்மைதான். இப்போது அதெல்லாம் சரியாகி விட்டது. இது சினிமாவில் சகஜம்தான். பெரிய விஷயமே கிடையாது. வெற்றியை தேடாமல், வேலையை ரசித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெற்றி நமது சிந்தனையில் இருந்தால் பாரம் வந்துவிடும். ஆனால் வேலையை ரசித்து செய்யும்போது அனைத்தும் தேடி வரும். விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வரவேண்டும். தவறு என்றால் திருத்திக் கொள்ள வேண்டும். அவன் வாழ்க்கையை அவன் வாழ்ந்துகொள்வான்” என்று கூறியுள்ளார்.