இந்த தலைமுறையினருக்கு பாலா என்பது யார் என ‘வணங்கான்’ படத்தின் மூலம் தெரியவரும்! – அருண் விஜய் | This generation will know who Bala is through the film ‘Vanangaan’!

சென்னை,
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களின் சந்திப்பின் போது ‘வணங்கான்’ படத்தை பற்றியும், இயக்குனர் பாலா பற்றியும் பேசியுள்ளார்.
அதாவது, நிச்சயமாக இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான படமாக இருக்கும். இந்த தலைமுறையினருக்கு பாலா என்பது யார் என ‘வணங்கான்’ படத்தின் மூலம் தெரியவரும். இந்த படம் ஒரு எதார்த்தமான படம். பாலா சார் ஒவ்வொரு படத்தில் எதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார், அதே போல இந்த படத்திலும் கண்டிப்பாக அந்த தாக்கம் இருக்கும். பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது.
மேலும், ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். இந்த படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். இயக்குனர் பாலா, அவருடைய தனித்துவமான கதை கூறும் விதம் மற்றும் காட்சியமைப்புகளுடன் இப்படத்தை துவங்கி என்னுடைய கேரியரில் ஒரு முக்கியமான படமாக மாற்றியுள்ளார்” என்று கூறியுள்ளார்.