இந்தியாவில் வெளியாகும் "கோல்டன் குளோப்" விருது வென்ற படம்

சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் இந்தியத் திரையரங்குகளில் வரும் 28ம் தேதி முதல் வெளியாகவுள்ளது என யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் இன்றுதெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற அட்ரியன் ப்ரூடி கதாநாயகனாக நடித்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியான ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து நாட்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்தது. நார்வே நாட்டு எழுத்தாளர் மோனா பாச்ட்வோல்டு உடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ப்ராடி கோர்பெட் இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு தப்பிய யூத கட்டிடக் கலைஞர் மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கோல்டன் குளோப் விருதுகளில் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த டிராமா திரைப்படத்திற்கான விருதுகளை வென்றுள்ளது. மேலும், வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு சில்வர் லயன் விருது உள்பட 5 விருதுகளை வாங்கி குவித்தது.
ஆஸ்கார் விருதுகளில் 10 பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் ஏற்கனவே ஓ.டி.டியின் மூலமாகவும் திரைப்பட விழாக்களின் மூலமாகவும் பார்த்த இந்திய ரசிகர்களினால் சமூக வலைதளங்களில் பெருமளவில் பேசப்பட்டு வந்த நிலையில் வரும் 28ம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.