இணையத்தில் கசிந்த ‘குபேரா’… அதிர்ச்சியில் படக்குழு

சென்னை,
தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகியிருக்கிறது. இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான குபேரா படம், வெளியாகி இரண்டு நாட்கள் கூட முழுமையாகாத நிலையில் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரிலீசானே அன்றே ஆன்லைனில் கசிவது வழக்கமான கதையாகி விட்டது. ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடும் வழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் பலரின் கோரிக்கையாக உள்ளது.