இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் புதிய ஆல்பம் வெளியீடு

இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகர் எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார். இவருடைய முதல் ஆல்பமான ‘பிளஸ்’ மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான, ஷேப் ஆப் யூ, திங்கிங் அவுட் லவுட், பெர்பெக்ட், ஷிவர்ஸ் போன்றவை இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. இவரது ஆல்பம் பாடல்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் பார்வைகளை பெறக்கூடியவை. இவருடைய ‘ஷேப் ஆப் யூ’ பாடல் மொழிகள் கடந்து சர்வதேச அளவில் கொண்டாப்படுகிறது. அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த எட் ஷீரன், ‘சப்பையர்’ என்ற பாடலை படமாக்கினார். இந்த பாடலும் பெரும் வைரலானது. இதில் ஷாருக்கான் தோன்றியிருந்தார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். திரை இசை பாடல்கள் தாண்டி தனி இசை பாடல்களை உருவாக்குவதிலும் தீவிரமாக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவர் புதிய பாடல் ஒன்றுக்காக சர்வதேச கூட்டணி ஒன்றை அறிவித்துள்ளார். உலகம் முழுக்க பிரபலமான ஆங்கில இசைக்கலைஞர் எட் ஷீரன் , கேரளா ராப் பாடகர் ஹனுமான்கைண்ட் மற்றும் தீ ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதற்கு முன்பு ‘ நீயே ஒலி ‘ மற்றும் ‘ எஞ்சாய் எஞ்சாமி ‘ போன்ற சுயாதீன பாடல்களை உருவாக்கியுள்ளார் சந்தோஷ்.
தீ, சந்தோஷ் இசையமைத்த ‘எஞ்சாய் எஞ்சாமி’, ‘மாமதுர’, ‘ சம்கீலா அங்கிலேசி’ மற்றும் ‘ஏ சண்டகரா ‘ உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் `தக் லைஃப்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ முத்த மழை ‘ பாடலை பாடியிருந்தார்.
ஹனுமான்கைண்ட் என்பவர் கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் ஆவார். இவரது ஆல்பம் பாடல்கள் உலக அளவில் பிரபலமானவை .ஆஷிக் அபுவின் ரைபிள் கிளப் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இந்நிலையில், இந்த மூவரும் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து ‘டோன்ட் லுக் டவுன்’ என்ற பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல் வெளியாகி இசை ரசிகர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாகி உள்ளது.