ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்; வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி

சென்னை,
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது பெறும் படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். நிகழ்ச்சியை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குவார். விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! என்று பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து தனக்கு வாழ்த்து தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.