ஆபாச வழக்கை நான் ‘புலி’யாக எதிர்கொண்டேன்- ஸ்வேதா மேனன் | I faced the obscenity case like a ‘tiger’

கொச்சி,
தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபல நடிகையான ஸ்வேதா மேனன் சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை ஸ்வேதாமேனன் பெற்றார்.
தேர்தல் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச படங்களில் நடித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நேரத்தில் திடீரென போடப்பட்ட வழக்கால் ஸ்வேதாமேனன் உள்பட திரை உலகினர் மத்தியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஸ்வேதா மேனன் சார்பில் முறையீடு செய்யப்பட்டு வழக்குக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இது குறித்து ஸ்வேதா மேனன் தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘இந்த வழக்கு எனக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படங்களுக்காக போடப்பட்ட வழக்கு. குறிப்பிடப்பட்ட படங்கள் எனக்கு மாநில விருதைப் பெற்று தந்தன. இது போன்ற வழக்கை யாரும் எதிர்கொள்ளவில்லை. தேர்தலில் இருந்து விலகி வழக்கை எதிர்த்து போராடலாமா? என்று எனக்கு குழப்பமாக இருந்தது. என் குடும்பத்தினரின் ஆதரவில் எனக்கு தைரியம் கிடைத்தது. இதை தொடர்ந்து நான் புலியாகி வழக்கை தைரியமாக எதிர் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.