ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்: நடிகை லட்சுமி மஞ்சுவிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஆன்லைனில் சட்ட விரோதமாக இயங்கி வரும் பல்வேறு சூதாட்ட செயலிகள் மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை முறைகேடு செய்திருப்பதும், மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்படி செயலிகளை மக்களிடையே விளம்பரப்படுத்திய விளையாட்டு வீரர்கள், நடிகர்-நடிகைகள் என பிரபலங்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகையான லட்சுமி மஞ்சு நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறையின் மண்டல அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இந்த வழக்கில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.