அவரது குரல் வளத்துக்கு நான் எப்போதுமே ஒரு ரசிகை – பாடகி ஸ்ரேயா கோஷல்

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கர்க் நேற்று காலமானார். இவர் பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். அதேபோல், அசாம் சினிமா துறையில் பல படங்களில் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர் என பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். ஜுபின் கர்க்கிற்கு மறைவிற்கு அசாம் முதல்-மந்திரி, திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த பாடகர் ஜுபின் கர்கை நினைவுகூர்ந்து பாடகி ஸ்ரேயா கோஷல் “ஜுபின் கர்க் நமது நாட்டின் ஒரு தனித்துவமான கலைஞர்; ஒரு மெகா ஸ்டார்; ஒரு நல்ல மனிதர். அவருடைய கலைத்திறமைக்கு, அவரது குரல் வளத்துக்கு நான் எப்போதுமே ஒரு ரசிகை. அவருடன் சேர்ந்து அஸ்ஸாமிய பாடல்கள் சிலவற்றில் பணியாற்றும் மாபெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஜுபின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று வருத்தத்துடன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் முதல் பாடலை கார்த்திக் ராஜா இசையில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த “ஆல்பம்” திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய “செல்லமே செல்லம் என்றாயடா” என்ற பாடலை ஸ்ரேயா கோஷல் பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் இடம்பெறும் ‘மாயவா… சாயவா…’ பாடலை பாடிய இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.