அவதூறு பரப்புபவர்கள் திருந்த சுடுகாட்டு சுடலை சாமி உதவ வேண்டும்: நடிகர் பார்த்திபன்

சென்னை,
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வருபவர் நடிகரும் இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் பல திரைப்படங்களை இயக்கி அவரே அதில் நடித்துள்ளார். பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ”இட்லி கடை” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ”அறிவு” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் எதிராகவும் நடிகர் பார்த்திபன் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் அந்த யூடியூப் சேனலும் எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், தான் இறந்துவிட்டதாக வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம் அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும்.
இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர குறுகிய பயண டிக்கெட் (shortest route ticket) வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.