அவதூறு பதிவுகளை நீக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி

சென்னை,
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு வழக்கை அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார்.அதைபோல ஆர்த்தி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கும் தன் இரு மகன்களுக்கு ஜீவனாம்சம் வழங்க ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி தள்ளிவைத்தார்.
தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடைவிதிக்கக்கோரி, ரவிமோகன் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ரவிமோகன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பித்தது.தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என கோரி மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் ரவி மோகனின் திருமண சர்சையை குறித்த அவதூறு செய்திகள் இடம் பெற்றுள்ள அனைத்து போஸ்டுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அது பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி நீக்கவில்லை என்றால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்த்தி, ஊடகங்கள், மீடியா உள்ளிட்ட ஆன்லைன் பயனர்கள் யாராக இருந்தாலும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடந்து வரும் திருமண விவகாரம் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து அப்படி ஏதேனும் வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றுள்ளார். அதோடு நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.