அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை – ‘கண்ணப்பா’ பட நடிகர்

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கொண்டிருப்பவர், சம்பத் ராம். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.
பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.
இதற்கிடையில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையுள்ளது என சம்பத்ராம் கூறியுள்ளார். அவர் கூறும்போது, ”வில்லன் நடிகராக ஏராளமான படங்களில் நடித்துவிட்டேன். ‘விக்ரம்’ படத்துக்கு பிறகு, இன்னும் பிரபலமானேன்.
பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும். அதேபோல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தவும் விரும்புகிறேன். பல வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். பெரிய அங்கீகாரத்துக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன்”, என்றார்.
‘தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்த சம்பத்ராமுக்கு, சிறந்த வில்லன் நடிகருக்கான ‘மலையாள புரஷ்காரம் 1200’ விருது சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.