அல்லு அர்ஜுனின் தந்தையிடம் அமலாக்கத்துறை 3 மணி நேரம் விசாரணை

தெலுங்கு திரை உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் அல்லுஅரவிந்த். நடிகர் அல்லுஅர்ஜுனின் தந்தையான அல்லு அரவிந்திடம் ரூ.101.4 கோடி வங்கி மோசடி மற்றும் பண மோசடி தொடர்பாக 3 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
அனுமதிக்கப்பட்ட கடன்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம் வங்கியை மோசடி செய்ததாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா (முன்னாள் ஆந்திரா வங்கி) அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.45 கோடியை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர். சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணம் செலுத்தியதற்கான பதிவுகளையும் கண்டறிந்தனர்.
தெலுங்கு திரை உலகில் பிரபல தயாரிப்பாளரும் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்திடம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.