அயர்டன் சென்னா நினைவாக ரேஸ் கார் வாங்கிய அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். சினிமாவில் எவ்வளவு ஈடுபாடுடன் இருக்கிறாரோ அதே அளவு ரேசிலும் ஆர்வமாக இருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது
அதனை தொடர்ந்து அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையில் அஜித் குமார் பேட்டி ஒன்றில் மறைந்த பார்முலா 1 பந்தய வீரர் அயர்டன் சென்னா தான் எனது ரோல்மாடல் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அஜித் குமார் அயர்டன் சென்னா நினைவாக பல கோடி மதிப்பிலான ரேஸ் காரை வாங்கி இருக்கிறார். இந்த காரை அயர்டன் சென்னா நினைவாக இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் (MCLAREN Automotive) என்ற நிறுவனம் ரேஸ் காரை தயாரித்துள்ளது. இந்த கார் ரேசுக்கு தேவையான ஸ்பெஷல் எடிசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அஜித், கார் ரேஸிங்கில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பதும், சென்னாவின் திறமை மற்றும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு இந்த காரை வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.