அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “எல்.ஐ.கே” படக்குழு

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘எல்ஐகே’ திரைப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த 3 படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். முதல் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தன. அதிலும் ஒய் திஸ் கொல வெறி பாடல் இந்தியா முழுவதும் சென்சேஷனல் ஹிட்டடித்தது. அனிருத் இந்த ஆண்டில் கூலி, மதராஸி உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஜெயிலர் 2, அரசன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இந்தியில் ஷாருக்கான் நடிக்கவுள்ள ‘கிங்’, அட்லி இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவுள்ள படம் ஆகியவை இருக்கின்றன.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் – ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அனிருத் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இன்னும் பெரிய உயரங்களை தொட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, “எல்.ஐ.கே” படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.