”அந்த ஹீரோ மிகவும் திறமையானவர்…ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை”

சென்னை,
ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடித்த ”ஹோம்பவுண்ட்” படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்தப் படம் சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது, அங்கும் பாராட்டுகளைப் பெற்றது.
இப்படம் வருகிற 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஒரு நேர்காணலில் ஜான்வி கபூர் இப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ”முதலில் இதுவும் ஒரு சாதாரண படம்தான் என்று நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பின்போதுதான் அதன் மகத்துவத்தைப் புரிந்துகொண்டேன். அற்புதமான ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்று குழுவினர் அனைவரும் உணர்ந்தோம்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் பத்து நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டல் பெற்றபோது, இந்தக் கதை அனைவரின் இதயங்களையும் எவ்வளவு தொட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இவ்வளவு சிறந்த கதையின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.
இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இஷான் கட்டர் நாட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் இதுவரை அவருக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்போது உலகம் அவரது நடிப்பைப் பாராட்டுவதைப் பார்த்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடினமாக உழைப்பவர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதை இது எனக்கு உணர்த்தியது” என்றார்.