”அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினார்…அந்த இயக்குனரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்”

சென்னை,
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ராசியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள ராசி, பாரம்பரிய மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களால் ரசிகர்களை ஈர்த்தார். தமிழில் லவ் டுடே (1997) மற்றும் பிரியம் (1996) போன்ற படங்களில் நடித்தார்.
இதற்கிடையில், மகேஷ் பாபுவின் நிஜம் படத்தில் எதிர்மறையான வேடத்தில் தோன்றி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதில் அவர் வில்லனின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நிஜம் படத்தில் நடித்தது பற்றி பகிர்ந்தார். அவர் கூறுகையில்,
”நான் நிஜம் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற முதல் நாளே, ஒரு காட்சியை இயக்குனர் என்னை நடிக்க வைத்தார். அந்தக் காட்சி உண்டு என்று அவர் முன்பு சொல்லவில்லை. படத்தில் நடித்தால் என் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் என்று உணர்ந்தேன். ஆனால் இயக்குனர் நடிக்க வேண்டும் என்றார்.
அதனால் நான் விருப்பமில்லாமல் நடித்தேன். டப்பிங்கின்போது தேஜா எனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும், நான் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் எந்த இயக்குனரை மறக்க விரும்புகிறேன் என்று கேட்டால்? தேஜாவின் பெயரைதான் சொல்வேன்” என்றார்.