‘அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்’ – ஏ.ஆர்.ரகுமான் | ‘Sometimes we lose our lives when we work too much’

‘அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்’ – ஏ.ஆர்.ரகுமான் | ‘Sometimes we lose our lives when we work too much’



சென்னை,

இந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.

குறிப்பாக 2009-ம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான், இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்தார். மேலும் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’, ‘கப்பில்ஸ் ரிட்ரீட்’, ‘127 ஹவர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளாக இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் வகையில் பாடல்களை கொடுத்து வருகிறார். அதே சமயம் ‘ஆடுஜீவிதம்’, ‘மைதான்’ உள்ளிட்ட படங்களில் உலகத் தரம் வாய்ந்த இசையை வழங்கி, சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன், ஏ.ஆர்.ரகுமானை அவரது மனைவி சாயிரா பானு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இவர்களுக்கு 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த விவாகரத்து செய்தி ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் ஏ.ஆர்.ரகுமான் இது குறித்து வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனது வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து அவர் பேசுகையில், “சில நேரங்களில் நாம் நிறைய திட்டங்களை தீட்டுகிறோம், ஆனால் அது ரத்தாகிவிடுகிறது. நான் தண்ணீரைப் போல, காலத்தின் ஓட்டத்தில் செல்கிறேன். வேலையிலும் அப்படித்தான்.

முன்பு, நான் ஒரு வெறி பிடித்தவன் போல, இரவும் பகலும் வேலை செய்தேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போது நான் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *