அடுத்தது யார்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்- சிவகார்த்திகேயன் நச் பதில்..! | Who is next? People will decide

சென்னை,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் ‘மதராஸி’. படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த், வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் மற்றும் பிஜுமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், மதராஸி ஏ.ஆர். முருகதாஸ் படம். இதுவரை இவ்வளவு ஆக்ஷன் நான் பண்ணினதில்லை. இது ஒரு மாஸ் கமர்ஷியல், பேஷன், எண்டர்டெய்னர் படம். படத்தில் காதல் இருக்கு. காமெடியும் இருக்கிறது.
சமீபத்தில் நான் தேர்வு செய்கிற ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கிறது. ‘டாக்டர்’ படம் டார்க் ஹியூமர் படம். படத்தை கமர்ஷியலாக மாற்றுவதற்கு படத்தின் கதாபாத்திரத்தை நெல்சன் மாற்றினார். அடுத்து ‘அமரன்’ வாழ்க்கை வரலாறு படம். அமரன் கதையை கேட்டதும் என்னால் அந்த கேரக்டருக்கு மாற முடியும் என நான் நினைத்ததால்தான் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்னேன். டைரக்டர் சொல்வதை தாண்டி செய்ய வேண்டியதிருந்தது. இன்னும் சொல்லப் போனால் படப்பிடிப்பில் இருந்த கஷ்டத்தை விட வெளியில் அவ்வளவு கஷ்டம் இருந்தது. உடற்பயிற்சி, உணவு பழக்கம், எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டி யதிருந்தது.
‘மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஹெவியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். படத்தின் கேரக்டரை ஒரு பாயிண்ட்களில் கண்ட்ரோல் பண்ண முடியாது. எனவே அதற்கு இப்படி ஒரு தோற்றம் வேண்டும் என்று கூறினார். அதற்கேற்றவாறு உடல்நிலையை மாற்றியது சவாலாக இருந்தது. ஏ.ஆர்.முருகதாசுடன் பணிபுரிவது ரொம்ப ஈசி. மதராசி படம் எதைப் பற்றி பேசும் என்றால் துப்பாக்கியை பற்றி பேசும். வடக்கில் இருந்து வரும் வில்லன் இங்குள்ள ஹீரோவை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம். அமரன் படத்தில் சாய்பல்லவி கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது போல் இந்த படத்தில் ருக்மணி வசந்த் உடனான கெமிஸ்ட்ரியும் நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் தமிழ் சினிமாவில் முதலில் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருந்தார்கள். அடுத்து ரஜினி, கமல். அதற்கடுத்ததாக விஜய், அஜித். இப்போது ரஜினி நடித்து கொண்டிருக்கிறார். கமல், விஜய் அரசியலுக்கு போய் விட்டனர். அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது.
அடுத்தது உங்களைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கேள்விக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில், ‘மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் உழைக்க தயார். ரஜினி, கமல், விஜய், அஜித் 4 பேருக்கும் தனித்துவம் இருக்கிறது.
நான் இதுவாக வேண்டும். அதுவாக வேண்டும் என்று நினைப்பதில்லை. நினைத்தால் குழம்பி விடுவேன். மக்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.