அஜித் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ‘விடாமுயற்சி’ இயக்குனர்

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் கார், பைக் ஓட்டுவதிலும் வல்லவர். சமீபத்தில், அஜித் குமார் கார் ரேஸிங் என்ற அணியை அஜித் துவங்கினார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் இந்த அணி கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித் குமார் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
‘ரேஸில் பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். “ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால்தான் என்னை நம்பி பணம், உழைப்பை போட்டுள்ள அனைவருக்காகவும் 2 படங்களையும் முடிக்க வேண்டும் என நினைத்தேன். ரேஸிற்கு செல்லும்போது நான் 100 சதவிகிதம் ஆக்ஸலரேட்டரரை அழுத்த வேண்டும். எனக்கு 2 படம் இருக்கு, கமிட்மெண்ட் இருக்கு என நினைத்து 90 சதவிகிதம் மட்டும் அழுத்தினால், நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என்பதுபோல ஆகிவிடும்” எனக் கூறினார். அவரின் இந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இதை வாழ்நாளிலும் நான் மறக்க மாட்டேன்’ என்றார்.