அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தால் தள்ளிப்போகும் தனுஷின் 'இட்லி கடை' ரிலீஸ்

சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஏப்ரல் 10-ந் தேதி தனுஷ் தானே இயக்கி நடித்து வரும் ‘இட்லி கடை’ வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இரண்டு படங்களும் ஒரே தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விடாமுயற்சி படத்தின் தோல்வியால் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில், குட் பேட் அக்லி படத்தின் டீசரும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தநிலையில் இட்லி கடை படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் தனுஷின் குபேரா திரைப்படம் ஜூன் 20 -ம் தேதி ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.