"அக்யூஸ்ட்" திரைப்பட விமர்சனம்

சென்னை,
கொலை குற்றவாளியான உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக, சென்னை புழல் சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்கிறார் போலீஸ்காரர் அஜ்மல். ஒருகட்டத்தில் பாதுகாப்பு சூழல் காரணமாக, அரசு பஸ்சில் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது உதயாவை கொலை செய்ய வெளிமாநில ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. இதற்கு போலீசாரும் உடந்தையாக, பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. கொலை கும்பலிடம் உதயா தப்பித்தாரா? அவரை துரத்தும் கும்பல் யார்? இதன் பின்னணி தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
காதல், சோகம், கோபம் என எல்லா பரிமாணங்களிலும் ‘ஸ்கோர்’ செய்கிறார், உதயா. இனி வரும் காலங்களில் நல்ல கதைகளைத் தேர்வு செய்தால் அவர் இன்னும் மிளிர்வார். அறிமுக நாயகியான ஜான்விகா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கண்களுக்கும் அவ்வப்போது ‘குளிர்ச்சி’ தருகிறார்.
போலீஸ்காரராக வரும் அஜ்மல் மிடுக்கான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். செல்லும் வழிகளில் சில காமெடிகளை சிதறவிட்டு ஆறுதல் தந்துள்ளார், யோகிபாபு. சாந்திகா, பவன், தயா பன்னீர்செல்வம், ஸ்ரீதர், பிரபு ஸ்ரீனிவாஸ், பிரபு சாலமன், சங்கர் பாபு, ஜெயக்குமார், தீபா, சுபத்ரா உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க முடிகிறது. பஸ் சண்டை காட்சி விறுவிறுப்பின் உச்சம். நரேன் பாலகுமாரின் இசை ஆறுதல். பின்னணி இசை ஓகே ரகம். உதயாவின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் பரபரப்பு குறைந்துவிட்டது. கொலைக்கான பின்னணியில் புதுமை வேண்டாமா? அரைத்த மாவையே அரைக்க வேண்டாமே?
ஆக்ஷன் கதையை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்ல முயற்சித்துள்ளார், இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ். ஆனால் ரசிகர்கள் விவரமானவர்கள் அல்லவா…
அக்யூஸ்ட் – சிக்காமல் இருந்தால் சரி…