The Naked Gun: திரை விமர்சனம்

ஹாலிவுட்டின் பழம்பெரும் ஆக்ஷன் ஹீரோ லியாம் நீஸன், பமீலா ஆண்டர்சன் நடிப்பில் வெளியாகியுள்ள The Naked Gun ஸ்பூஃப் காமெடி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.
கதைக்களம்
ஸ்பெஷல் போலீஸ் குழுவில் பணியாற்றும் பிராங்க் ட்ரெபின் (லியாம் நீஸன்), பேங்க்கில் கொள்ளை நடந்தபோது திருடப்பட்ட டிவைஸ் ஒன்றை தேடும் பணியில் ஈடுபடுகிறார்.
அப்போது கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த கேஸையும் அவரே விசாரிக்கிறார். அதில் இறந்தவரின் சகோதரியான பெத் டேவேன்போர்ட் (பமீலா) ட்ரெபினுக்கு உதவுகிறார்.
அவர் தன் சகோதரர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக ட்ரெபினிடம் கூற, தொழிலதிபரான டேனி ஹஸ்டன் மீது சந்தேகம் வருகிறது.
டேனி உலகளவில் பெரிய பிரச்சனையை கொண்டுவர திட்டம் தீட்டி வருகிறார்.
அதன் பின்னர் டேனியின் திட்டத்தை முறியடித்து, ட்ரெபின் எப்படி மக்களை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
The Naked Gun சீரிஸில் வந்துள்ள 4வது திரைப்படம் இது. ஹாலிவுட்டில் வந்த போலீஸ் இன்வெஸ்டிகேசன் படங்களை ஸ்பூஃப் (கிண்டல்) செய்து எடுக்கப்படுவதே The Naked Gunயின் திரைக்கதை ஆகும்.
கடந்த 3 பாகங்களிலும் லெஸ்லி நீல்சன் பிராங்க் ட்ரெபின் கேரக்டரில் நடித்திருந்தார்.
இம்முறை அவரது மகனாக லியாம் நீஸனை நடிக்க வைத்துள்ளார்கள்.
டேக்கன், ஏ-டீம் போன்ற படங்களில் ஆக்ஷ்ன் ஹீரோவாக நாம் பார்த்த லியாம் நீஸனை, ‘என்னையா பண்ணி வைச்சிருக்கீங்க’ என்று கேட்க தோன்றும் அளவிற்கு காமெடி செய்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அவரோ டார்க் காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் பமீலா ஆண்டர்சனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
படம் முழுக்க ஸ்பூஃப் காமெடிதான் என்றாலும், ஆங்காங்கே முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இருக்கத்தான் செய்கிறது.
ஆகையால் இது பக்கா அடல்ட்ஸ் ஒன்லி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றபடி சுவாரஸ்யதிற்கு பஞ்சமில்லை.
NYPD போலீஸ் டிபார்ட்மென்டை கலாய்ப்பது, குற்றவாளியை விசாரிக்கும்போது சிசிடிவி காட்சிகளை காட்டுவது (இந்தக் காட்சி வரும்போது எதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது) போன்ற காட்சிகள் செம அலப்பறை.
அதிலும் உச்சமாக, மிஷன் இம்பாசிபில் படத்தின் விசாரணை காட்சியை பங்கமாக கலாய்த்திருக்கிறார்கள்.
கிளைமேக்சில் பிரபல WWE நட்சத்திரத்தின் கேமியோ செம சர்ப்ரைஸ்.
க்ளாப்ஸ்
லியாம் நீஸன், பமீலா ஆண்டர்சன்
காமெடி
ரன்னிங் டைம் (126 நிமிடங்கள்)
பல்ப்ஸ்
பாதி படத்திற்கு மேல் சில இடங்கள் டல்லடிக்கிறது