3BHK திரைவிமர்சனம்

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் 3 பி.ஹெச்.கே (3BHK). இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஜே. அச்சர் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள 3BHK எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
அப்பா சரத்குமார், அம்மா தேவயானி, மகன் சித்தார்த் மற்றும் மகள் மீதா ரகுநாத் ஆகியோர்தான் இந்த வாசுதேவன் & ஃபேமிலி. இவர்களுடைய கனவு தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது மட்டும்தான். அதற்காக குடும்பமாக சேர்ந்து கடுமையாக உழைக்கிறார்கள்.
12ம் வகுப்பு படித்து வரும் சித்தார்த்துக்கு படிப்பு அவரது மண்டையில் ஏறவில்லை. தன் மகன் நன்றாக படித்து தங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்த்து, மிகப்பெரிய ஆளாக வருவான் என கனவு காணுகிறார்கள். மறுபக்கம் வீடு வாங்குவதற்கான ரூ. 15 லட்சத்தை சேர்த்து வருகிறார்கள்.
ஒரு வருடத்தில் முழு பணத்தையும் சேர்த்துவிட்ட நேரத்தில், 12ம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் சித்தார்த். இதனால் நிறைய பணம் தந்தால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கும் என்பதால், வீடு வாங்க சேர்த்து வைத்த பணத்தை சித்தார்த்தின் கல்லூரி Admission Fees கட்டிவிடுகிறார்கள்.
இதனால் மீண்டும் முதலில் இருந்து வீடு வாங்க காசு சேர்த்து வரும் நிலையில், வருடங்கள் ஓடிவிடுகிறது. தற்போது ரூ. 15 லட்சம் அல்ல ரூ. 25 லட்சம் தந்தால் மட்டுமே வீடு வாங்க முடியும் என புரோக்கர் சொல்லிவிடுகிறார். இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் சரத்குமார், தனது தம்பியிடம் சென்று கடன் கேட்கிறார்.
ஆனால், அவரோ உன்னை நம்பி எப்படி நான் பணம் தருவது. உன் மகன் நன்றாக படித்து கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ-வில் தேர்வாகி விட்டால், நான் அந்த பணத்தை தருகிறேன் என கூறிவிடுகிறார். இதனால், வீட்டில் அனைவரும் கேம்பஸ் இன்டர்வியூ-வில் சித்தார்த் தேர்வாகி விட வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இதன்பின் சரத்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு அருவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணமும் செலவாக, மீண்டும் வீடு என்கிற கனவை நோக்கி ஓடுகிறார்கள். இதன்பின் மகளின் திருமணம் நடக்கிறது. அதற்கு ரூ. 35 லட்சம் செலவாகிறது. இப்படி பல போராட்டங்களை கடந்து வாசுதேவன் & ஃபேமிலி தங்களுக்கு சொந்தமாக புதிய 3BHK வீடு வாங்கினார்களா இல்லையா என்பதே மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஜே. அச்சர் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களின் யதார்த்தமான நடிப்பு நம்மை கதைக்குள் அழகாக பயணிக்க வைக்கிறது.
பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசிக்கும் பெற்றோர்களாக சரத்குமார், தேவயானி. பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளாக சித்தார்த், மீதா ரகுநாத் என வாசுதேவன் & ஃபேமிலியை வடிவமைத்த விதம் மிகச்சிறப்பு.
மிடில் கிளாஸ் குடும்பத்தின் உணர்வையும், எதிர்காலத்தை மட்டுமே யோசித்து வாழும் மனதை பற்றியும் இப்படத்தில் அழகாக காட்டியுள்ளார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
இந்த சமூகத்தில் அவன் சொல்கிறான், இவன் சொல்கிறான் என கேட்டுவிட்டு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்லது என நினைத்து செய்து வைக்கும் விஷயங்களில், பிள்ளைகள் எப்படி மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பேசியுள்ளது இந்த 3BHK. அதை தங்களது நடிப்பில் சிறப்பாக காட்டிய மீதா ரகுநாத் மற்றும் சித்தார்த்துக்கு தனி பாராட்டுக்கள்.
சித்தார்த் மற்றும் சைத்ரா ஜே. அச்சர் பல வருடங்களுக்கு பின் பார்த்துக்கொள்ளும் காட்சியும், அவர்கள் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்திய காட்சியும் அதை அழகாக ஒளிப்பதிவு செய்த விதமும் மனதை தொடுகிறது. அதை தங்களது நடிப்பில் இருவரும் சிறப்பாக வழங்கியிருந்தனர்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், வீட்டின் Hall-ல் அனைவரும் இணைந்து பேசி முடிவு செய்வது, அதற்காக ஏற்படும் சண்டைகள், மகிழ்ச்சியான தருணங்கள், முரண்பாடுகள், கண்ணீர்கள் என அனைத்துமே நம் குடும்பத்தை நினைவூட்டுகிறது. இதனால் படத்துடன் நம்மை இணைய முடிந்தது. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
இயக்குநர் ஸ்ரீ கணேஷிற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். 3BHK என்றவுடன் கண்டிப்பாக வீடு வாங்குவது தான் இப்படத்தின் முடிவு என்பதை அனைவரும் கணித்து இருப்போம். ஆனால், அதை வாசுதேவன் & ஃபேமிலி எப்படி செய்தார்கள், அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனது, அதனால் இழந்தது என்னென்ன என்பதை யதார்த்தமாக இப்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். ஒரு வீடு என்றால் அது செங்கல், சிமெண்ட் சேர்த்து கட்டுவது மட்டும் அல்ல, குடும்பம் எங்கு இருக்கிறதோ, அதான் வீடு என சொன்ன விதம் மனதை தொட்டுவிட்டது.
படத்தின் மிக முக்கியமான அம்சம் வசனங்கள். ஒரு தந்தை தனது மகனை பார்த்து, ‘நீ என்னை போல் ஆகிவிட்டதே’, ‘நான் தோன்றலும் என் மகன் பிரபு ஜெயித்து விடுவான்’, ‘Sorry பா’ என வலி நிறைந்த வசனங்கள் நம் கண்ணீரை கைத்தட்டல்களாக பெற்றுவிட்டது. அதே போல் ஒப்பனை இப்படத்தில் மிகப்பெரிய ரோல் செய்துள்ளது. சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோருக்கு இப்படத்தில் வயது சித்தியாசத்தை ஒப்பனை மூலம் அழகாக கையாண்டுள்ளனர்.
நடிகர்களின், நடிப்பு, இயக்குநரின் இயக்கம், வசனங்கள், திரைக்கதை, என இவை அனைத்திற்கும் தங்களது பங்களிப்பால் உயிர் கொடுத்துள்ளனர் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத், எடிட்டர் கணேஷ் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் தினேஷ் பி. கிருஷ்ணன், ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ்.
பிளஸ் பாயிண்ட்
சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஜே. அச்சர் ஆகியோரின் நடிப்பு
ஸ்ரீ கணேஷ் இயக்கம் மற்றும் திரைக்கதை
யதார்த்தமான மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள்
ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இசை
வசனம்
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றும் இல்லை