யூத் திரை விமர்சனம்

கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள யூத் திரைப்படம் இன்று திரையரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, சுராஜ், தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். வாங்க, படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
10ஆம் வகுப்பில் ஜஸ்ட் பாஸாகி 11ஆம் வகுப்பு செல்லும் பிரவீன் (கென் கருணாஸ்), எப்படியாவது ஒரு காதலிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் பள்ளிக்கு செல்கிறார். பள்ளியில் காதலிக்க தொடங்கி, கல்லூரியில் காதலை தொடர்ந்து, அதே பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்பதே அவருடைய லட்சியமாக இருக்கிறது.
ஆனால், ஒரு பெண் கூட இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கிறார் மீனாட்சி. இவருக்கும் கென்னுக்கும் இடையே காதல் மலர, இந்த காதலை பிரிக்க வேண்டும் என்கிற சதியும் சிலரால் நடந்து வருகிறது.
மீனாட்சி தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்கிற காரணத்தினால் ஊருக்கு செல்கிறார். இந்த சமயத்தில், சோனல் என்கிற பெண் கென்னிடம் தனது காதலை கூற, அவருக்கு நோ சொல்ல மறுக்கிறார் கென். இந்த நிலையில், கென் – சோனல் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் மீனாட்சி, கென்னுடன் பிரேக்கப் செய்கிறார்.
காதல் தோல்வியில் இருக்கும் கென்னுக்கு அனிஷ்மாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இதுவரை நான் செய்தது காதல் இல்லை, இதுதான் உண்மையான காதல் என புரிந்துகொண்டு அனிஷ்மாவுடன் பழகி வரும் கென், தனது காதலை பள்ளியின் இறுதி நாளில் அவரிடம் கூறுகிறார். ஆனால், நான் உன்னை நல்ல நண்பனாகதான் பார்த்தேன் என அனிஷ்மா கூற, உடைந்துபோகிறார் கென்.
தொடர்ந்து காதலை தேடி கொண்டிருக்கும் கென்னுக்கு காதல் கிடைத்ததா? படிக்காமல் சுற்றிக்கொண்டிருந்த கென்னின் பள்ளி வாழ்க்கை என்னவானது? இதன்பின் அவர் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்தித்தார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
சுராஜ் மற்றும் தேவதர்ஷினி ஆகிய இருவரும் வழக்கம் போல் தங்களுக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். அதே போல் மீனாட்சி, அனிஷ்மா, நளினி, கென்னின் நண்பர்களாக நடித்தவர்கள் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த ரோலில் தங்களுடைய பங்கை பொருத்தமாக செய்துள்ளனர்.
ஹீரோவாக அறிமுகமாகியுள்ள கென் கருணாஸ் துள்ளலான நடிப்பில் பக்காவான யங் கமர்ஷியல் ஹீரோவாக திரையில் தெரிகிறார். நடனம், நகைச்சுவை, எமோஷ்னல், ஆக்ஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குநராக களமிறங்கியுள்ள கென்னுக்கு (கென் & கேங்) முதலில் வாழ்த்துகள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை. தன் கதாபாத்திரம் உட்பட அனைத்து கதாபாத்திரங்களையும் வடிவமைத்த விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும், வழக்கமான ஒரு திரைக்கதையை வைத்து இதையெல்லாம் செய்தது சற்று வருத்தத்தை தருகிறது.
ஆரம்பத்தில் இருந்து தனது இஷ்டத்திற்கு சுற்றி கொண்டிருக்கும் ஒருவன், திடீரென ஒரு காரணத்திற்காக திருந்திவிடுவது என்பது நம்பிக்கையை கொடுத்தாலும், இதையே இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திரையில் பார்ப்பது என்கிற சலிப்பு ஏற்படுகிறது. அது மட்டும்தான் இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.
இதைத்தவிர, படத்தில் மிடில் க்ளாஸ் மக்களை தொடும் வகையில் வைத்திருந்த எமோஷ்னல் காட்சிகள், படிப்பு எவ்வளவு முக்கியம் என சொன்ன காட்சி, காதல் என்றால் எதிர்பார்ப்பு இல்லாமல் வருவது எதிர்பார்ப்புடன் வருவது அல்ல என சொன்னது போன்ற பல காட்சிகள் சிறப்பாக இருந்தது.
அதே போல், படத்தில் எங்கு தொய்வு வந்தாலும், அங்கு தனது பின்னணி இசையாலும், பாடல்களாலும் என்டர்டைன் செய்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். மேலும், கலர்புல்லான ஒளிப்பதிவு மற்றும் பக்காவான எடிட்டிங் படத்தை தூக்கி பிடிக்கிறது.
பிளஸ் பாயிண்ட்
சுராஜ், தேவதர்ஷினி, கென், மீனாட்சி, அனிஷ்மா நடிப்பு
பின்னணி இசை மற்றும் பாடல்கள்
ஒளிப்பதிவு, எடிட்டிங்
எமோஷ்னல் மற்றும் நகைச்சுவை காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்
ஏற்கனவே பல முறை பார்த்து பழகிப்போன திரைக்கதை






