தசாவதாரம் முதல் சந்தோஷ் சுப்ரமணியம் வரை.. 2008ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்

2008ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
தசாவதாரம்
நடிகர் கமல்ஹாசனின் கெரியரில் மிக முக்கிய படம் இது. 12ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் தொடங்கி கடந்த தசாப்தத்தில் வந்த சுனாமி வரை திரையில் காட்டி எல்லோரையும் அசர வைத்திருப்பார் கமல்.
இதில் 10 வேடங்களில் நடித்திருக்கும் கமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பல விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
2008ல் வந்த படங்களில் தசாவதாரம் மிக முக்கிய ஒரு படமாகும்.
வாரணம் ஆயிரம்
16 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இருந்தாலும் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடும் படம் தான் வாரணம் ஆயிரம். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா அப்பா – மகன் என இரண்டு ரோல்களில் இதில் நடித்து இருப்பா.
காதலுக்காக எதையும் செய்யும் நபர், காதலி இறந்தபிறகு போதைப்பொருளுக்கு அடிமையாகிறார். அவர் அதில் இருந்து மீண்டு வந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் என்பதை சிறப்பாக காட்டி இருப்பார் இயக்குனர்.
யாரடி நீ மோகினி
தனுஷ் – நயன்தாரா நடித்து இருந்த இந்த படம் தற்போதும் காதலர்கள் கொண்டாடும் ஒன்று. 2008 ஏப்ரல் 4ம் தேதி ரிலீஸ் ஆனது யாரடி நீ மோகினி.
செல்வராகவன் இயக்கிய Aadavari Matalaku Arthale Verule என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்த படம். மித்ரன் ஜவகர் இந்த படத்தை இயக்கி இருப்பார்.
எதார்த்தமான காதல் கதை. ஹீரோ ஹீரோயினிடம் லவ் ப்ரொபோஸ் செய்ய அவர் அதை நிராகரிக்கிறார். அதன் பின் ஹீரோவின் அப்பா சென்று ஹீரோயினிடம் அது பற்றி பேசுகிறார். அவர் அசிங்கப்படுத்தி அனுப்ப, ஹீரோவின் அப்பா வீட்டில் தூங்கும்போதே இறந்துவிடுகிறார்.
சோகத்தில் இருக்கும் ஹீரோவை அவனது நண்பன் தன் ஊருக்கு அழைத்து செல்வான். தான் ப்ரொபோஸ் செய்த பெண் தான் தனது நண்பன் திருமணம் செய்ய போகிறான் என தெரியவரும்.
தன்னால் தான் ஹீரோவின் அப்பா இறந்துவிட்டார் எங்கிற குற்றவுணர்ச்சி ஒரு பக்கம், ஹீரோ தனுஷ் மீது இருக்கும் சிம்பதி இன்னொரு பக்கம் என ஹீரோயினுக்கும் காதல் வந்துவிடும். ஆனால் ஏற்கனவே நண்பனுக்கு நிச்சயம் ஆன பெண், ஜாதி பிரச்னையை தாண்டி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் கதை.
சுப்ரமணியபுரம்
2008ல் ஜூலை 4ம் தேதி ரிலீஸ் ஆனது சுப்ரமணியபுரம். சசிக்குமார் இயக்கிய இந்த படம் ‘சில நண்பர்களின் கதை’.
80கள் காலகட்டத்தில் நடக்கும் கதை. இதில் நட்பு, காதல், துரோகம், வன்முறை என அனைத்தும் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும்.
அந்த படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
சந்தோஷ் சுப்ரமணியம்
2008ல் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆனது சந்தோஷ் சுப்ரமணியம். ஜெயம் ரவி (இப்போது ரவி மோகன் என பெயர் மதறிக்கொண்டார்), ஜெனிலியா, பிரகாஷ் ராஜ், சந்தானம், சாயாஜி ஷிண்டே என பலரும் இதில் நடித்திருப்பார்கள்.
மகனுக்கு எல்லாமே பெஸ்ட் ஆக கொடுக்க வேண்டும் என பார்த்து பார்த்து செய்யும் அப்பா. ஆனால் என் வாழ்க்கையில் அனைத்தையுமே அப்பாவே முடிவெடுக்கிறார் என்கிற ஆதங்கத்தில் இருக்கும் மகன் தான் ஹீரோ.
அவருக்கு ஹாசினி (ஜெனிலியா) உடன் காதல் வர, அவரை எப்படி வீட்டுக்கு கொண்டு வந்து அந்த ஸ்ட்ரிக்ட் அப்பாவை திருமணத்திற்கு சம்மதிக்க முயற்சிக்கிறார் என்பது தான் படம்.
அறை எண் 305ல் கடவுள்
பிரகாஷ்ராஜ் கடவுளாகவும், சந்தானம் மற்றும் கஞ்சா கருப்பு அவரையே சோதிப்பவர்களாகவும் காமெடியாக எடுக்கப்பட்டு இருந்த படம் தான் “அறை எண் 305ல் கடவுள்”.
2008ல் ஏப்ரல் 18ல் இது ரிலீஸ் ஆனது. அந்த வருடம் நல்ல லாபத்தை கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று.
அஞ்சாதே
மிஷ்கின் இயக்கிய இரண்டாவது படம் இது. நரேன், பிரசன்னா உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருப்பார்கள்.
போலீஸ் வேலையை லட்சியம் ஆக வாழும் ஒருவர், அதற்கு நேர் எதிராக பொறுக்கித்தனமாக வாழும் இன்னொருவன் என இரண்டு நண்பர்கள் வாழ்க்கையை இந்த படம் காட்டி இருக்கும்.
பூ
சசி இயக்கத்தில் பார்வதி, ஸ்ரீகாந்த், இன்பநிலா உள்ளிட்டோர் நடித்து இருந்த படம் பூ. வழக்கமாக ஹீரோ எப்படி காதல் செய்கிறான் என்பது தான் கதையாக பல படங்களில் இருக்கும். ஆனால் மாரி என்ற ஒரு பெண் கண்ணோட்டத்தில் ஒரு காதல் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் காட்டி இருப்பார்.
அதில் மாரியாக நடித்த பார்வதி தற்போது மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.