கடைசி விவசாயி முதல் லவ் டுடே வரை.. 2022ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்கள்

கொரோனாவால் சில வருடங்கள் முடங்கிய பிறகு மீண்டும் முழு வீச்சில் சினிமாத்துறை செயல்பட தொடங்கிய வருடம் தான் 2022.
அந்த வருடத்தில் வெளியான சிறந்த தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.
கார்கி
இந்த படத்தில் கார்கி (சாய் பல்லவி)யின் அப்பா ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்படுகிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என சொல்லி அவரை காப்பாற்ற பல விதங்களில் போராடுகிறார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கிளைமாக்சில் இருக்கும். அப்போது கார்கி என்ன செய்கிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
15 ஜூலை 2022ல் இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
கடைசி விவசாயி
காக்கா முட்டை பட புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்திற்கும் 2 தேசிய விருது கிடைத்தது. விவசாயியாக நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பலர் நடித்து இருந்தனர்.
வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து வரும் நல்லாண்டியின் பார்வையில் ஒரு கிராமம் படத்தில் காட்டப்பட்டு இருக்கும்.
வழக்கமாக கிராமம் என்றால் வெட்டு, குத்து, சண்டை, வன்முறை என படங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மணிகண்டன் ஒரு எதார்த்தமான கிராமத்தை நம் கண்முன் திரையில் கொண்டுவந்திருப்பார்.
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இந்த படம் 2022ல் பெரிய அளவில் பேசப்பட்ட படமாகும். அதற்கு காரணம் தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் எப்படி இருக்கிறது என்பதை காட்டிய விதம் தான்.
காதலன் மற்றும் காதலி இருவரும் தங்கள் மொபைல் போனை exchange செய்துகொண்டு சில நாட்கள் இருக்க வேண்டும். அப்போது தான் ஒருவரை பற்றி இன்னொருவருக்கு தெரிய வரும் என ஹீரோயினின் அப்பா அதிரடியாக முடிவெடுக்கிறார்.
அதனால் இருவரது முகத்திரையும் கிழிந்து, உண்மையான விஷயங்கள் தெரியவருகிறது. அந்த பிரச்சனைகளை தாண்டி அவர்கள் இணைவார்களா என்பது தான் படத்தின் கதை.
4 நவம்பர் 2022ல் இந்த படம் வெளியாகி ஹிட் ஆகி இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது.
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022ல் வெளியான விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டப் பலர் நடித்து இருந்தனர்.
அதே வழக்கமான drugs மற்றும் கேங்ஸ்டர் பற்றிய கதை தான் என்றாலும் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக வடிவமைத்து இருப்பார் இயக்குனர்.
கிளைமாக்ஸில் வரும் ரோலக்ஸ் சூர்யாவின் கெஸ்ட் ரோல் படத்திற்கு பெரிய ஹைலைட் ஆக அமைந்தது.
பொன்னியின் செல்வன் 1
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்புடன் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது.
2022 செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்தார்கள்.
திருச்சிற்றம்பலம்
தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் ஒரு அழகான காதல் கதை தான் திருச்சிற்றம்பலம். படத்தில் திருச்சிற்றம்பலம் என்கிற பழம் ரோலில் தனுஷ் நடித்து இருப்பார். அவருடன் சின்ன வயதில் இருந்தே நெருக்கமாக இருக்கும் தோழி தான் ஷோபனா (நித்யா மேனன்).
தான் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் காதலை சொல்ல ஷோபனாவின் உதவியை கேட்கிறார் பழம். ஆனால் ஷோபனாவே அவர் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என புரிந்துகொள்ள அவருக்கு பெரிய தாமதம் ஏற்படும். அது தான் இந்த படத்தின் கதையும்.
ஆகஸ்ட் 18, 2022ல் இந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.