Onslaught: திரை விமர்சனம்
Onslaught திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் ஆக்ஷ்ன் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகியுள்ள Onslaught எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
ஒரு காலத்தில் இராணுவத்தில் பணியாற்றிய செலெஸ்ட் (அட்ரியா அர்ஜோனா), வின்டி ஓயாஸிஸ் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் சிலருக்கு வீடுகளை வாடகைக்கு விட்டு அவர் வருமானம் பார்க்கிறார். என்றாலும் துப்பாக்கிசூடுதல் பயிற்சியையும் செய்து வருகிறார்.
இந்த சூழலில் சூப்பர் சோல்ஜர் ஆய்வினை ஹன்ஸ் கம்லர் (டேன் ஸ்டீவன்ஸ்) என்ற மருத்துவர் மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக போர்க்களத்தில் மிகவும் மூர்க்கமாக செயல்பட்ட மூன்று இராணுவ வீரர்களை அவர் தேர்வு செய்து வைத்துள்ளார்.
அவர்களை சூப்பர் சோல்ஜர்ஸ் ஆக மாற்ற மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
பின்னர் அவர்களை சோதிக்க, ஆய்வுக்கூடத்தில் சிலரை விட்டு சண்டையிட வைக்கிறார்கள். எதிர்பாராத விதமாக அந்த 3 சூப்பர் சோல்ஜர்ஸும் பலரையும் அங்கு கொன்றுவிட்டு தப்பிக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து செலெஸ்ட் எப்படி தன்னையும், தன் மகளையும் தற்காத்துக் கொண்டார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
காட்ஸில்லா X காங்: தி நியூ எம்பையர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து ஆடம் வின்கார்ட் இயக்கியிருக்கும் படம் இது.
சைமன் பர்ரேட்டின் திரைக்கதை மற்றும் அவருடன் சேர்ந்து ஆடம் வின்கார்ட் கதையையும் எழுதியுள்ளார்.
படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகி அட்ரியா அர்ஜோனா மும்முரமாக துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டும்போது, மாஸ் ஆக்க்ஷன் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.
ஆனால், காட்சிகள் நகர நகர நமது பொறுமையை மிகவும் சோதிக்கிறது திரைக்கதை. பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளாக படம் செல்கிறது.
சூப்பர் சோல்ஜர்ஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளியேறிய பின் படம் கொஞ்சம் வேகமெடுக்கிறது. ஆனால் யூகிக்கக் கூடிய வகையிலான எல்லாம் நடக்கின்றன.
முன்னாளில் இராணுவத்தில் பணியாற்றிய அட்ரியா எப்படி சூப்பர் சோல்ஜர்ஸுடன் மோதி அவர்களை தோற்கடித்தார் என்ற எதிர்ப்பு படம் முழுக்க நிலவும்போது, மாறாக பயந்து ஓடி ஒளிவதை பார்க்கும்போது மிகுந்த ஏமாற்றம் ஏற்படுகிறது.
கையில் கிடைக்கும் துப்பாக்கியை வைத்து சுடுவதைத் தவிர அவர் புத்திசாலித்தனமாக எதுவும் செய்யவில்லை. அதிலும் இருமுறை வேறொரு கதாபாத்திரம்தான் அட்ரியாவை காப்பாற்றுகிறது.
ட்ரீவ் ஸ்டார்கீயின் கதாபாத்திரத்திற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
சிறுமி பிளாக் கென்னடி க்யூட் ஆக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அட்ரியா அர்ஜோனாவுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை என்றாலும் நல்ல பெர்பார்மன்ஸை கொடுத்துள்ளார். அலெக்ஸ் பெரெய்ரா உடல்மொழியிலேயே மிரட்டுகிறார்.
இரத்தம் தெறிக்கும் வன்முறை அதிகம் உள்ளதால், கண்டிப்பாக இது குழந்தைகளுக்கான திரைப்படம் கிடையாது.
மேட் புஸ்டியின் பின்னணி இசை பல இடங்களில் டென்ஷனைக் கூட்டுகிறது. ஒரேன் சோஃபரின் ஒளிப்பதிவு நன்று.
க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
வலுவில்லாத திரைக்கதை
பார்த்து பழகிய காட்சிகள்
மொத்தத்தில் இந்த Onslaught (தாக்குதல்) பார்வையாளர்களின் பொறுமையை சோதித்துவிட்டது.
