அங்கீகாரம்: திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் தென்பதியன் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜே. ராஜேஷ் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அங்கீகாரம். கே.ஜே. ராஜேஷை இதற்கு முன் தயாரிப்பாளராக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
தடகள வீரரான ஆதிரன் பானுமதி (கே.ஜே. ராஜேஷ்) சர்வதேச அளவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெல்வதை தனது லட்சியமாக கொண்டுள்ளார். அதற்காக மிகவும் போராடி பயற்சி எடுத்து வருகிறார்.
மறுபக்கம் இவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. ஆதிரனின் தாய் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். தங்கை கல்லூரியில் படிக்கிறாள். இதனால் காமன்வெல்த் விளையாட்டில் பங்குபெற்ற வெற்றிபெற்றால் மட்டுமே தன்னுடைய குடும்பத்தின் நிலை மாறும் என கடுமையாக பயிர்ச்சியை மேற்கொள்கிறார்.
விளையாட்டில் வெற்றி பெறுவதான முயற்சியும், போராட்டமும் ஒரு பக்கம் என்றால், அதனை சுற்றி நடக்கும் அரசியலையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு ஆளாக்கப்படுகிறார் ஆதிரன். தேசிய அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைக்கிறார். ஆனால், அந்த போட்டியில் இவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
என்னதான் சாதனை செய்திருந்தாலும், ஆதிரன் அதிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுக்கிறார். ஆனால், ஆதிரனை எப்படியாவது நிராகரிக்க வேண்டும் என்பதற்காக தசைப்பிடிப்பை காரணமாக கொண்டு ஆதிரனை காமென் வெல்த் போட்டிக்கு தேர்வு செய்ய மறுக்கிறார்கள்.
பல மாதங்கள் போராடியும் ஆதிரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுகிறார் ஆதிரன். ஆனால், அங்கும் அவர் எதிர்பார்த்த நீதி கிடைக்காமல் போய்விடுமோ என ஒரு கட்டத்தில் அவநம்பிக்கை ஏற்பட, இந்தியாவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுகிறார் ஆதிரன்.
வழக்கு தொடுத்த ஆதிரன் எப்படி தனக்கான நீதியை பெற்றார்? இதனால் அவர் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொண்டார்? அவருடைய குடும்பத்தின் நிலை மாறியதா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வந்த கே.ஜே. ராஜேஷ் இப்படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இப்படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, போட்ட உழைப்பு அனைத்தும் திரையில் கண்கூடாக தெரிகிறது. குறிப்பாக ஒரு விளையாட்டு வீரர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாகவே தெரிகிறார்.
விளையாட்டிற்காக போராடும் நபராக இவர் வெளிப்படுத்திய நடிப்பு சிறப்பு. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், படத்தின் இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் இவர் வாதாடும் விதம், எதிர் தரப்பில் வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சாமர்த்தியமாக கையாளும் திறன், கிளைமாக்ஸில் தன்னுடைய மொத்த உணர்வையும் கொட்டி தீர்த்தது என பட்டையை கிளப்பிவிட்டார்.
கதாநாயகனின் அம்மாவாக நடித்துள்ள நடிகை ரமாவிற்கு பாராட்டுகள். தூய்மை பணியாளராக சிறப்பாக நடித்துள்ளார். தினம் தினம் அந்த வேலை செய்பவர்கள் என்னென்ன கஷ்டப்படுகிறார்கள், அதனால் அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை தனது நடிப்பில் நடிகை ரமா வெளிப்படுத்தியது உணர்வுபூர்வமாக இருந்தது.
எப்படியாவது தனது மகனும் மகளும் நன்றாக வாழ்ந்துவிட மாட்டார்களா என்கிற ஏக்கம், இவர்களுடைய தலைமுறை தலைதூக்காத என்கிற எதிர்பார்ப்பு என அனைத்தையும் தனது நடிப்பில் அழகாகவும் எமோஷனலாகவும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்களுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். நடிப்பை பொறுத்தவரை பெரிதாக குறை எதுவும் இல்லை.
அறிமுக இயக்குநர் தென்பதியன் தனது முதல் படத்திலேயே இப்படியொரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்கு பாராட்டுகள். விளையாட்டு என்றாலே கிரிக்கெட் தான் என பலருக்கும் நினைப்பு உண்டு. ஆனால், அதை தாண்டி பல விளையாட்டுகள் உள்ளன, அதில் பல லட்சம் பேர் உழைப்பு போட்டு தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார்கள் என்பதை இப்படத்தில் காட்டியுள்ளார். பல உண்மை சம்பவங்களை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். அது மிகவும் எமோஷனலாக இருந்தது.
முதல் பாதி சற்று விறுவிறுப்பு குறைவாக இருப்பதை உணர முடிகிறது. சில காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. அதை இன்னும் கூட எடிட்டிங்கில் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கலாம் என படம் பார்க்கும்போது தோன்றியது. இரண்டாம் பாதி, குறிப்பாக நீதிமன்ற காட்சிகள் தொடங்கிய பின் திரைக்கதை வேகமெடுத்தது. அங்கிருந்து கிளைமாக்ஸ் வரை திரைக்கதையை சிறப்பாக செதுக்கியுள்ளார் இயக்குநர்.
வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதை தாண்டி பின்னணி இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் உள்ளிட்ட டெக்னிகல் ஒர்க்ஸ் அனைத்தும் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறது.
பிளஸ் பாயிண்ட்ஸ்
கே.ஜே. ராஜேஷின் நடிப்பு
நடிகை ரமா மற்றும் அனைத்து நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
இரண்டாம் பாதி
எமோஷனல் காட்சிகள்
நீதிமன்ற காட்சிகள்
வசனம்
மைனஸ் பாயிண்ட்
முதல் பாதியில் ஏற்பட்ட தொய்வு






