ஹரிஷ் கல்யாணின் “டீசல்”: சினிமா விமர்சனம்

1979-ம் ஆண்டில் வடசென்னையில் நடக்கும் கதை. வட சென்னையின் கடலோர பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தை மத்திய அரசு அமைக்கிறது. இந்த போராட்டத்தில் தனது நண்பர்கள் உயிரிழந்து போக, கச்சா எண்ணெயை திருடி விற்று, அதில் வரும் பணத்தில் அந்த கிராம மக்களுக்கு நல்லது செய்கிறார், சாய்குமார். சாய்குமாரின் மகனான ஹரிஷ் கல்யாண் கெமிக்கல் என்ஜினீயர். தனது படிப்பை கொண்டு தந்தைக்கு துணையாக கச்சா எண்ணெய் திருட்டில் ஈடுபடும் அவர், அதை வெளிமாநில தொழிற்சாலைக்கு அனுப்பி பெட்ரோல் – டீசலாக மாற்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்கிடையில் தொழில் எதிரியான விவேக் பிரசன்னா, சாய்குமாரின் லாரிகளை மடக்கி பெட்ரோல்-டீசலை திருடி, கலப்படம் செய்கிறார். இதனை கண்டுபிடிக்கும் ஹரிஷ் கல்யாண் எரிமலையாக வெடிக்கிறார்.
விவேக் பிரசன்னாவுக்கு துணையாக வரும் போலீஸ் அதிகாரி வினய்க்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் மோதல் ஏற்பட, ஹரிஷ் கல்யாண் தலைமறைவு ஆகிறார். இதை பயன்படுத்தி பல சதிவேலைகளை வினய் – விவேக் பிரசன்னா அரங்கேற்றுகிறார்கள். சாய்குமாரும் கைதாகிறார். ஒருகட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான 2 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் திருட்டு போக நாடே ஸ்தம்பித்து போகிறது. இதற்கு யார் காரணம்? எல்லாம் கைமீறி போன நிலையில் ஹரிஷ் கல்யாண் அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சரிசெய்தார்? என்பதே பரபரப்பான மீதி கதை.
பக்கா கமர்ஷியல் ஹீரோவாக கலக்கியிருக்கிறார், ஹரிஷ் கல்யாண். முடிந்தவரை முயற்சி செய்திருக்கும் அவரது எமோஷனல் கலந்த நடிப்பு கைகொடுத்திருக்கிறது. நடிப்பு, நடனம் என வாய்ப்புள்ள இடங்களில் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.
பெரியளவில் பேசப்படாவிட்டாலும், வரும் காட்சிகள் அத்தனையிலும் கவனம் ஈர்க்கிறார், அதுல்யா ரவி. சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். வினய்யின் வில்லத்தனம் மிரட்டல். அதிலும் ஹரிஷ் கல்யாண் கேட்டுக்கொண்டதற்காக அவர் சிரிக்கும் இடம் சிறப்பு.
சாய்குமாரின் கதாபாத்திரம் நினைவில் நிற்கிறது. விவேக் பிரசன்னாவின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. ரிச்சர்டு எம்.நாதன், எம்.எஸ்.பிரபு ஆகியோரின் ஒளிப்பதிவில் வடசென்னை பகுதிகளில் கேமரா வட்டம் அடித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசை படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. ‘டென் தவுசண்ட் பீர்’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் போகலாம்.
ஆக்ஷன் காட்சிகள் பலம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாதது பலவீனம். லாஜிக் மீறல்கள் வேண்டாமே…
சில குறைகள் இருந்தாலும், நேர்த்தியான திரைக்கதையில் காட்சிகளை அடுக்கி, பல விஷயங்களை ஒரே தளத்தில் சொல்லி கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர் சண்முகம் முத்துசாமி.
டீசல் – நெடி அதிகம்