திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு

சென்னை,
புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை சினிமா படமாக தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கையும் படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு அய்யா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளயது. இந்த படத்தை பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை படத்தில் அவரது இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.
திரைப்படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






