28 Years Later: திரை விமர்சனம்

28 Years Later: திரை விமர்சனம்


ஹாலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள ’28 Years Later’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்:

 ஸ்காட்டிஷ் தீவு ஒன்றில் வசித்து வரும் மக்கள், ரேஜ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

அப்போது தாய், தந்தையை பறிகொடுக்கும் ஜிம்மி என்ற சிறுவன் மட்டும் தப்பிக்கிறார். இது நடந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜேமி தனது மனைவி ஐலா, மகன் ஸ்பைக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

மகனுக்கு 12 வயதாகிவிட்டதால்,மெயின்லேண்ட் என்ற பக்கத்துக்கு தீவுக்கு அவனை அழைத்துக் கொண்டு ஒற்றை வழிப்பாதையில் செல்கிறார் ஜேமி.

மக்கள் அனைவரும் சிறுவன் ஸ்பைக்கை உற்சாகப்படுத்தி வாழ்த்தி அனுப்புகிறார்கள். அந்த தீவில் வைரஸால் இன்பெக்ட் ஆனவர்களை இருவரும் அம்பு எய்து கொல்கிறார்கள்.

28 Years Later: திரை விமர்சனம் | 28 Years Later Movie Review

எனினும், ஓர் இரவை அங்கேயே கழிக்க வேண்டியதாகிறது. மறுநாள் மீண்டும் தங்கள் ஊருக்கு இருவரும் திரும்ப, கொண்டாட்டத்தின்போது அப்பா வேறொரு பெண்ணுடன் இருப்பதை ஸ்பைக் பார்க்கிறான்.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட தன் அம்மாவை, யாருக்கும் தெரியாமல் மெயின்லேண்ட் தீவிற்கு சிறுவன் ஸ்பைக் அழைத்து செல்கிறான்.

அங்கு அவர்களுக்கு என்ன ஆனது? மகனை தந்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்:

கிலியன் மர்பி நடிப்பில் 2002ஆம் ஆண்டில் வெளியான 28 Days Later படத்தை இயக்கிய டேனி பாயல்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இடையில் 28 Weeks Later (2007) என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் அப்படத்தை ஜுவான் கார்லோஸ் பிரெஸ்னடில்லோ இயக்கியிருந்தார்.

ரேஜ் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் வெறித்தனமாக மற்றவர்களை தாக்குவதும், அவர்களிடம் இருந்து ஒரு சிலர் தப்பிப்பதும்தான் இந்த படவரிசையின் ஒன்லைன். ஜாம்பி படங்களுக்கு முன்னோடியாக இந்த படவரிசை பேசப்படுகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் 28 Years Later படத்தில், மக்கள் தினமும் சண்டைக்கு வில், அம்பு உள்ளிட்ட ஆயுதங்களை தயார் செய்வதையே பிரதான வேலையாக வைத்திருக்கிறார்கள்.

அதற்கு காரணம் எப்போது வேண்டுமானாலும் மெயின்லேண்ட் தீவில் இருந்து இன்பெக்ட் ஆனவர்கள் தாக்க வரலாம் என்பதால் தான்.

அப்படியிருக்க அங்குள்ளவர்கள் அவ்வப்போது வேட்டையாடிவிட வேண்டும் என்றும் சிலர் முயற்சிக்கிறார்கள்.
 

28 Years Later: திரை விமர்சனம் | 28 Years Later Movie Review

இப்படத்தைப் பொறுத்தவரை கதாநாயகன் ஜேமியாக நடித்துள்ள ஆரோன் டெய்லர் ஜான்சனை விட, சிறுவன் ஸ்பைக் ஆக நடித்துள்ள ஆஃல்பி வில்லியம்ஸிற்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அதனை கணக்கச்சிதமாக செய்து முடித்துள்ளார் அவர். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.

உதாரணமாக, தன் அம்மாவுக்கு இருக்கும் பிரச்சனையை அறிந்து ‘அவங்கள காப்பாத்த இதெல்லாம் பண்ணவா’ என வெகுளியாக கேட்கும் இடமும், மண்டை ஓட்டை உச்சியில் வைக்கும் இடமும் செம எமோஷனல் டச்.

படம் முழுக்க சீரியாக போகும் என்றும் நினைக்கும்போதுதான் எரிக் என்ற கதாபாத்திரம் வருகிறது.

ஸ்வீடன் இராணுவ வீரராக வரும் எரிக் மற்றும் சிறுவன் ஸ்பைக் உடனான உரையாடல்கள் செம கலாட்டா. ஆனால், எரிக்கின் முடிவு எதிர்பாராதது.

மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்ப்பது, தாயை காப்பாற்ற சிறுவன் போராடுவது என பல இடங்களில் சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

அதே சமயம் இன்பெக்ட் ஆனவர்களில் ஆல்பா என்ற மனிதன் தாக்க வரும் காட்சிகள் எல்லாம் திக் திக் மொமென்ட்ஸ்தான்.

க்ளாப்ஸ்:

கதைக்களம்

திரைக்கதை

ஆஃல்பி வில்லியம்ஸ் (ஸ்பைக்) நடிப்பு

சவுண்ட் எபெக்ட்ஸ்

பல்ப்ஸ்:  

பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் ஜாம்பி படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு நல்ல ட்ரீட் இந்த படம்.

ரேட்டிங்: 3/5 

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *