முதல் நாள் வசூலில் சாதனை படைத்த "எம்புரான்"

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த "எம்புரான்"


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் ‘சையத் மசூத்’ என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

‘எம்புரான்’ படத்தின் முன்பதிவு மட்டும் உலகமெங்கும் 58 கோடி ரூபாய்க்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக எம்புரான் சாதனை படைத்துள்ளது. முதல் நாளில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவானது.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் ‘எம்புரான்’ நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

இந்த நிலையில், ‘எம்புரான்’ வெளியான முதல் நாளான நேற்று ரூ.22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்தப் படம் மலையாளத்தில் ரூ.19.45 கோடியும், தெலுங்கில் ரூ.1.2 கோடியும், தமிழில் ரூ.80 லட்சமும், இந்தியில் ரூ.50 லட்சமும், கன்னடத்தில் ரூ.5 லட்சமும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக பிருத்விராஜ் நடித்து வெளியான ‘ஆடு ஜீவிதம்’ இருந்தது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் அதிகபட்சமாக 7.6 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் வசூல் செய்தது. இந்த வசூலையெல்லாம் கடந்து ‘எம்புரான்’ முதல் நாளில் வசூலில் சாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *